தொடர்ந்து தேங்காய் பருப்பு விலை சரிந்து வருவதால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.62 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது. காங்கயம் வெள்ளக்கோவில், லாலாபோட்டை, திருச்சி, கரூர், வில்வாதம்பட்டி, வையம்பட்டி, வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 191 பேர்,93 ஆயிரம் கிலோ எடை கொண்ட 1761 தேங்காய் பருப்பு மூட்டைகளை, வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

விற்பனைக்கூட கண்காணிப்பாளர் முன்னிலையில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், ஊத்துக்குளி பகுதி எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் 15 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் தரமான முதல் தர பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ 76.65 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ 54 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் 62 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

தமிழகத்திலேயே அதிக தேங்காய் உற்பத்தி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருப்பதால், உலர் களங்கள் காங்கயம் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகம் அமைந்துள்ளன. இங்கு ஆண்டு முழுவதும் கொப்பரை மற்றும் அரவைக்கு உலர்த்தப்படுவதால்,தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் தேங்காய்கள் கொப்பரையாக்க கொண்டு வரப்படும்.

ஆனால் கடந்த சில மாதங்களைக் காட்டிலும் இந்த மாதம் கொப்பரை விலை கடுமையாக சரிந்து வருவது விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதோடு,விலைச் சரிவால் இழப்பும் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.