34 லட்சம் ரூபாய்க்கு மேல் பருத்து விற்பனை செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.34 லட்சத்திற்கு பருத்தி விற்பனை நடைபெற்றுள்ளது.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்துள்ள பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு புரட்டாசி பட்ட பருத்தி ஏலத்திற்கு சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், தேவூர், எடப்பாடி, மேட்டூர், கொளத்தூர், அந்தியூர், அம்மாபேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 1,482 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் பிடி ரக பருத்தி குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரத்து 321க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 89க்கும் விற்பனையானது.
இதனை பெருந்துறை, சத்தியமங்கலம் புளியம்பட்டி அன்னூர், கோவை, கொங்கணாபுரம், அந்தியூர் ஆகிய சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து போட்டி போட்டு ஏலத்தில் எடுத்து சென்றனர். மொத்தம் 34 லட்சத்து ஆயிரத்து 175 ரூபாய்க்கு பருத்தி விற்பனையானது.
பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் சில நாட்களுக்கு முன்னர் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் ரூ.12 லட்சத்துக்கு தேங்காய் உள்ளிட்ட வேளாண் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் மொத்தம் 3,889 தேங்காய்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.
இந்த ஏலத்தில் சிறிய தேங்காய் 6.90 ரூபாய்க்கும், பெரிய தேங்காய் 11.50 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம் 27,809 ரூபாய்க்கு தேங்காய் விற்பனையானது. அதேபோல, இந்த விற்பனைக் கூடத்துக்கு 62 மூட்டைகள் அளவுக்கு கொப்பரை தேங்காய் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.
கொப்பரை தேங்காய் விலையைப் பொறுத்தவரையில், குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ.7,686க்கும், அதிகபட்சமாக ரூ. 8,169க்கும் என மொத்தம் ரூ.1.76 லட்சத்துக்கு விற்பனையானது. மற்ற வேளாண் விளைபொருட்கள் விற்பனையும் சூடுபிடித்தது. 417 மூட்டைகள் நிலக்கடலை விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ. 7,269க்கும், அதிகபட்சமாக ரூ. 7,609க்கும் என மொத்தம் ரூ.8.83 லட்சத்துக்கு விற்பனையானது.
அதேபோல, நெல் 65 மூட்டைகள் கொண்டு வரப்பட்டது. அதில் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக 1,692 ரூபாய்க்கும், அதிகபட்சமாக ரூ. 2,354க்கும் என மொத்தம் ரூ. 87,205க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.