தங்கம் விலை தொடர்ந்து உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஸ்பாட் மார்க்கெட்டில் கடந்த வாரம் தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு 1852 டாலரை தொட்டது. இதன்பிறகு ஏராளமானோர் லாபம் புக் செய்ததால் விலை சரிந்தது. எனினும், இங்கிலாந்து வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதாலும், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 90 டாலரை தாண்டியுள்ளதாலும், தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

நேற்று ஸ்பாட் மார்க்கெட்டில் தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு 1807.95 டாலர் என முடிவடைந்துள்ளது. இந்தியாவில் எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை 10 கிராமுக்கு 31 ரூபாய் உயர்ந்து 47948 ரூபாய் என்ற அளவில் முடிவடைந்தது.

தங்கம் விலை தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக கமாடிட்டி மார்க்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சர்வதேச அளவில் பணவீக்கம் உயர்ந்துள்ளது. இதன் விளைவாக தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், ஐரோப்பிய மத்திய வங்கியும், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. எண்ணெய் உற்பத்தியை உயர்த்தும்படி ஒபெக் நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், ஒபெக் நாடுகளோ உற்பத்தியை அதிகரிக்காது என தெரிகிறது.