பருத்தி நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் போராட்டம் செய்தனர்.
தமிழகத்தில் இப்போது நூல் மற்றும் பஞ்சு விலை உயர்வு பெரும் பிரச்சினையாக எழுந்துள்ளது. திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பிரச்சினை பூதாகரமாக எழுந்துள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர்.
பருத்தி நூல் விலை கடந்த 6 மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வெண்ணந்தூரில் விசைத்தறி கூடங்களை இயக்காமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பருத்தி நூல் விலை உயர்வைக் கண்டித்து நூலை மாலையாக அணிந்துகொண்டு நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் விசைத்தறி துணி நூல் உற்பத்தியாளர்கள் மனு கொடுத்துள்ளனர்.