கொரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு ஐரோப்பாவில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது என்றும் அடுத்த வருட தொடக்கத்தில் பிரான்ஸில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் எனவும் அந்நாட்டின் பிரதமர் ஷான் காஸ்டெக்ஸ் எச்சரித்துள்ளார்.

ஐரோப்பாவை பொறுத்தவரை பிரிட்டனில் ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு வெள்ளியன்று 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்றின் ஒமிக்ரான் திரிபு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரட்டனிலிருந்து வருவோருக்கு பிரான்ஸ் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஐரோப்பா முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நெதர்லாந்தில் நவம்பர் மாதம் முதல் பார்கள், உணவகங்கள் மாலை நேரங்களில் செயல்படுவதில்லை. ஐரோப்பாவில் இதுவரை 89 மில்லியன் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு 1.5 மில்லியன் பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். பிரிட்டனில் தொடர்ந்து மூன்றாவது நாளாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு ஒமிக்ரான் திரிபே காரணம் என்று கூறப்படுகிறது.