தமிழக அரசு விரைவில் பெண்களுக்கான முக்கிய திட்டங்களை மேலும் விரிவாக்க முடிவு செய்ய இருக்கிறது. இவை “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை”, “புதுமைப் பெண் திட்டம்”, மற்றும் “தமிழ் புதல்வன் திட்டம்” ஆகும். தமிழக அமைச்சரவை வரும் அக்டோபர் 8ம் தேதி கூடவுள்ளது, அப்போது இந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உதயநிதி துணை முதல்வரான பின்னர் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், அரசியல் வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
திமுக அரசு 2021ம் ஆண்டு பதவியேற்ற பின்னர், மகளிருக்கு கட்டணமில்லா பஸ்சு பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் போன்ற பல முன்னேற்றமான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
2023-24ம் நிதி ஆண்டில் இந்த திட்டத்திற்கு ரூ.8,123.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, இதில் 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டது. 2024-25ம் ஆண்டிற்கு இதற்கான நிதி ரூ.13,722.47 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் மாதம் 31ம் தேதியின்படி, முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்கள் உட்பட 1 கோடியே 15 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தினால் பயனடைந்தனர்.
தகவல்களின் படி, இவ்வாண்டில் கூடுதலான பெண்கள் இந்த உதவித் தொகையைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு வேலை செய்யும் பெண்கள், மாநகராட்சிகளில் பணிபுரிபவர்கள் இதிலிருந்து விலக்கப்படுவர். ஆனால், பெரும்பாலான ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் சில முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது