தமிழகத்தில் பெய்துவரும் பருவ மழையால் கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளது. வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரைகள் உடைப்பு ஏற்பட்டு கரையோரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது.
இதனால் கோழி பக்கம், வெள்ளை பாக்கம், பெரிய கங்கனாங்குப்பம், உச்சிமேடு, நாணமேடு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடலூர் மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அதிகாரி அன்சுல் மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், “தென்பெண்ணையாற்று வெள்ளத்தால் கடலூர் மாவட்டத்தில் சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை காக்க, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் தற்போது குடியிருப்பு பகுதியில் தேங்கிய வெள்ளநீர் குறைந்ததால், முகாம்களில் இருந்து மக்கள் வீடுகளுக்குத் திரும்பி செல்கின்றனர். வீடுகளுக்கு மக்கள் திரும்பினாலும், அவர்களால் உணவு சமைக்க முடியவில்லை. அதனால் தொடர்ந்து உணவு வழங்கப்படுகிறது,” என்றார் அவர்.