வானில் இன்று அரங்கேறும் முக்கோண சங்கமம் இன்று இரவு வானை அண்ணாந்து பார்த்தால் ஒரு அபூர்வ காட்சி காத்திருக்கிறது. நிலவு, சனி மற்றும் நெப்டியூன் ஆகிய மூன்று கோள்களும் மிக நெருக்கமாக காட்சியளிக்கும் ‘ட்ரிபிள் கன்செக்‌ஷன்’ (Triple Conjunction) என்ற அரிய நிகழ்வுதான் அது. உண்மையில் இந்த மூன்றும் பல மில்லியன் கிலோமீட்டர் இடைவெளியில் தனித்தனியாகத்தான் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. ஆனால் பூமியிலிருந்து நாம் பார்க்கும்போது அவை ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போல ஒரு தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தும். வானியலாளர்கள் இதை ‘Right Ascension’ என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது பூமியில் இடங்களை துல்லியமாக அறிய தீர்க்கரேகைகளை பயன்படுத்துகிறோமே, அதே போல விண்வெளியில் உள்ள பொருட்களின் இருப்பிடத்தை கணக்கிட இந்த முறை பயன்படுகிறது. இன்று இவை மூன்றும் ஒரே புள்ளியில் சந்திப்பதாகத் தோன்றுவதால், அருகருகே ஒட்டிக்கொண்டிருப்பது போல நமக்குத் தெரியும்.

காண்பது எப்படி? இதை வானில் அடையாளம் காண்பது ரொம்ப சுலபம். வானில் 26 சதவீத ஒளியுடன் மெல்லிய பிறையாகத் தெரியும் நிலவை முதலில் கண்டுபிடியுங்கள். அதுதான் உங்களுக்கான திசைகாட்டி. அந்த நிலவுக்குப் பக்கத்திலேயே அசையாமல் மின்னும் ஒரு மஞ்சள் நிறப் புள்ளி உங்கள் கண்ணில் பட்டால், அதுதான் சனி கோள். இதை சாதாரண கண்களாலேயே பார்த்து ரசிக்கலாம். நெப்டியூன் இவற்றுக்கு அருகிலேயே இருந்தாலும், அது வெகு தொலைவில் இருப்பதால் பைனாகுலர் அல்லது சிறிய டெலஸ்கோப் உதவியின்றி பார்க்க முடியாது. சூரியன் மறைந்து 30 முதல் 90 நிமிடங்களுக்குள், மேற்கு அல்லது தென்மேற்கு அடிவானத்தை (Horizon) நோக்கிப் பாருங்கள். இரவு 8:30 மணிக்குள் பார்த்துவிடுவது உத்தமம், அதன் பிறகு இந்தக் கோள்கள் அடிவானத்திற்குக் கீழே மெல்லச் சென்று மறைந்துவிடும். நகரத்து வெளிச்சம் அதிகம் இல்லாத, திறந்தவெளிப் பகுதிக்குச் சென்றால் இந்த வானியல் அற்புதத்தைத் தெளிவாக ரசிக்கலாம்.

ஒளிந்திருக்கும் பிரபஞ்சத்தின் இருண்ட ரகசியங்கள் இப்படி நம் கண்களுக்குத் தெரியும் கோள்களைப் பார்த்து நாம் வியந்து கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் கண்ணுக்கே தெரியாத பிரபஞ்ச ரகசியங்களை விஞ்ஞானிகள் கட்டவிழ்த்து வருகிறார்கள். பொதுவாக விண்மீன் திரள் (Galaxy) என்றால் நட்சத்திரங்கள், வாயுக்கள், தூசு, கிரகங்கள் மற்றும் கரும்பொருள் (Dark matter) எல்லாம் சேர்ந்த ஒரு பிரம்மாண்டமான அமைப்பு என்பது நமக்குத் தெரியும். ஆனால், பெரும்பாலும் கரும்பொருளால் மட்டுமே ஆன, நட்சத்திரங்களே இல்லாத அல்லது மிகச் சில நட்சத்திரங்களை மட்டுமே கொண்ட ‘இருண்ட விண்மீன் திரள்கள்’ (Dark galaxies) விண்வெளியில் இருக்கின்றன. பல காலமாகவே இவை வெறும் கோட்பாடுகளாகத்தான் பார்க்கப்பட்டு வந்தன. சில மங்கலான விண்மீன் திரள்களை விஞ்ஞானிகள் கண்டறிந்திருந்தாலும், இருண்ட விண்மீன் திரள்களை நேரடியாகக் கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவாலாகவே இருந்து வந்தது.

பெர்சியஸ் கூட்டத்தில் சிக்கிய CDG-2 இந்தச் சவாலை முறியடித்து, ஒரு வலுவான இருண்ட விண்மீன் திரளை தற்போது ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். டொராண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புள்ளியியல் மற்றும் வானியற்பியல் ஆய்வாளர் டேவிட் லி தலைமையிலான குழுவினர், பூமியிலிருந்து சுமார் 300 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பெர்சியஸ் (Perseus) விண்மீன் கூட்டத்தில் இதனை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு CDG-2 (Candidate Dark Galaxy 2) என்று பெயரிட்டுள்ளனர். வெளிச்சமே இல்லாத ஒன்றை எப்படி கண்டுபிடித்தார்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இங்குதான் ‘குளோபுலர் கிளஸ்டர்கள்’ (Globular Clusters – GC) என்றழைக்கப்படும் கோள வடிவ நட்சத்திரக் கூட்டங்கள் கைகொடுத்தன. பல மில்லியன் நட்சத்திரங்களை உள்ளடக்கிய இந்தக் கூட்டங்கள், பொதுவாக சுழல் விண்மீன் திரள்களின் விளிம்புப் பகுதிகளில் காணப்படும். ஹப்பிள், ஐரோப்பிய விண்வெளி முகமையின் யூக்ளிட் மற்றும் ஜப்பானின் சுபாரு ஆகிய மூன்று பெரிய தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி, பெர்சியஸ் கூட்டத்தில் நெருக்கமாக அமைந்திருந்த நான்கு குளோபுலர் கிளஸ்டர்களை விஞ்ஞானிகள் உற்று நோக்கினர்.

ஒளியற்ற உலகத்தின் தடயங்கள் இந்த மூன்று தொலைநோக்கிகள் திரட்டிய தரவுகளை அதிநவீன புள்ளிவிவரக் கணிப்புகளுக்கு உட்படுத்தியபோது, அந்த நான்கு நட்சத்திரக் கூட்டங்களைச் சுற்றி மிக மெல்லிய ஒரு ஒளிர்வைக் கண்டுபிடித்தனர். அந்த மங்கலான ஒளிக்குக் காரணம், தனித்தனியாகப் பார்க்க முடியாத அளவுக்கு ஒளியிழந்த நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு இருண்ட விண்மீன் திரள்தான் என்பதை அவர்கள் உறுதி செய்தனர். குளோபுலர் கிளஸ்டர்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒரு விண்மீன் திரள் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை என டேவிட் லி கூறுகிறார். இந்த அமைப்பின் மொத்த ஒளியில் குறைந்தபட்சம் 16.6 சதவீதம் அந்த குளோபுலர் கிளஸ்டர்களில் இருந்தே வருவதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CDG-2 தற்செயலாக அமைந்த ஒரு கூட்டம் அல்ல என்பதை உறுதி செய்த பிறகு, எடுக்கப்பட்ட படங்களை ஒன்றிணைத்துப் பார்த்தபோது அந்த மங்கலான ஒளி உமிழ்வு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமானது. இது எந்தவொரு தொழில்நுட்பக் கோளாறாலும் உருவான பிம்பம் அல்ல என்பதையும் ஆய்வாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இந்தப் புதிய கண்டுபிடிப்பு, இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட CDG-1 என்ற விண்மீன் திரள் மீதான கவனத்தையும் அதிகரித்துள்ளது. ஒருவேளை CDG-1, இந்த CDG-2 ஐ விடவும் நட்சத்திரங்களே இல்லாத அதீத இருன்மை கொண்ட ஒரு ‘இரட்டை’ விண்மீன் திரளாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள இன்னும் துல்லியமான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட உள்ளன.