கர்நாடகாவில் உள்ள கல்லூரி ஒன்றில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இது தொடர்பான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் தீர்வு காணாத வரையில், ஹிஜாப் அல்லது காவி மேல்துண்டு எதுவாக இருந்தாலும், மதம் சார்ந்த உடைகளுக்கு அனுமதி இல்லை என உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உடனடி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சிலர் இது தங்கள் சட்டப்பூர்வமான உரிமை என்றும் சிலர், கல்வி நிறுவனங்களில் மதச் சின்னங்களை அணிவது முறையன்று என்றும் கருதுகின்றனர். ஆனால் சில நாடுகளில், பல ஆண்டுகளுக்கு முன்பே, பொது இடங்களில் முகத்தை மூடுவது அல்லது நிகாப், புர்கா, பர்தா போன்ற முகத்தையும், உடலையும் மறைக்கும் இஸ்லாமிய பெண்களுக்கான ஆடைகளை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. சில நாடுகளில், விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் முறையும் உள்ளது.

11 ஏப்ரல் 2011 அன்று, பொது இடங்களில் முகத்தை முழுவதுமாக மூடும் இஸ்லாமிய முக்காடுகளான நிகாப்களைத் தடை செய்த முதல் ஐரோப்பிய நாடாக ஃபிரான்ஸ் ஆனது. இந்தக் கட்டுப்பாட்டின் கீழ், எந்தப் பெண்ணும், பிரெஞ்சுக்காரராக இருந்தாலும் சரி, வெளிநாட்டவராக இருந்தாலும் சரி, முகத்தை முழுவதுமாக மூடிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. விதியை மீறுவோருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. அப்போது ஃபிரான்ஸ் அதிபராக இருந்தவர் நிக்கோலா சர்கோசி. தடையை விதித்த சர்கோசி நிர்வாகம், பர்தா பெண்களுக்கு எதிரான அடக்குமுறை என்றும் ஃபிரான்ஸில் அது வரவேற்கப்படாது என்றும் கருதியது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2016-ம் ஆண்டு ஃபிரான்ஸில் இன்னொரு சர்ச்சைக்குரிய சட்டம் கொண்டுவரப்பட்டது. பெண்களின் முழு உடலையும் மறைக்கும் ‘புர்கினி’ (புர்கா + பிகினி) என்னும் நீச்சலுடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், பின்னர் ஃபிரெஞ்சு உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டத்தை ரத்து செய்தது.