இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகி, தலைமைத் தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், அந்த ஹெலிகாப்டரின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தரைப்படையின் ஓய்வுபெற்ற கர்னல் கணேசன் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார்.
பேட்டியிலிருந்து: கே. இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாக இம்மாதிரி மிக முக்கியமானவர்கள் பயணம் செய்யும் ஹெலிகாப்டர்களுக்கான பாதுகாப்பு சோதனை எப்படி இருக்கும்? ப. விபத்து நடந்த தினம் இந்திய வரலாற்றில் ஒரு கறுப்பு தினம். பல ராணுவ தளபதிகள் இருக்கிறார்கள் என்றாலும், முப்படைகளின் தலைவர் ஒரு ராணுவ விமான விபத்தில் உயிரிழப்பது மோசமானது.
அவர் பயணம் செய்த Mi 17 V5 என்ற இந்த ஹெலிகாப்டர் ரஷ்யத் தயாரிப்பு. இந்தியாவில் இந்த வகை ஹெலிகாப்டர்கள் கிட்டத்த 150 என்ற எண்ணிக்கையில் உள்ளன. குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் இந்த ஹெலிகாப்டர்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். பல முறை பயணம் செய்திருக்கிறார்கள். இந்த ஹெலிகாப்டர் தவிர, நம்மிடம் சீட்டா, சேடக் வகை ஹெலிகாப்டர்களும் உள்ளன.
ஆனால், இந்த சீட்டா, சேடக் வகை ஹெலிகாப்டர்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகும் என்பதால், 2008க்குப் பிறகு இந்த Mi 17 ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தத் துவங்கினோம். இந்த ஹெலிகாப்டர் மிகவும் உறுதியான, பாதுகாப்பான ஹெலிகாப்டர்.
அது தவிர, ஒரு முக்கியப் பிரமுகர் ஹெலிகாப்டரில் பயணிக்கப் போகிறார் என்றால், அதற்கு முன்பாக ஹெலிகாப்டர் முழுமையாகப் பரிசோதிக்கப்படும். எந்த விமானி அந்த ஹெலிகாப்டரை இயக்கப் போகிறாரோ அவர், ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பாக அதே பாதையில் ஹெலிகாப்டரை இயக்கி, எங்கு இறக்க வேண்டுமோ அங்கு ஹெலிகாப்டரை இறக்கி எவ்வளவு நேரம் ஆகிறது என்பதையெல்லாம் துல்லியமாக குறித்துக்கொள்வார்கள்.