இந்திய டி20 அணிக் கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகிய நிலையில், ஒருநாள் அணிக் கேப்டன் பதவியிலிருந்து பிசிசிஐயால் நீக்கப்பட்டார்.
இதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, “இந்திய ஒருநாள், டி20 அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்கள் இருந்தால் நன்றாக இருக்காது. இதனால்தான், கோலியை ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கினோம். டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகியபோது, விலக வேண்டாம் என நான் கேட்டுக்கொண்டேன். இருப்பினும் கோலி விலகினார்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விராட் கோலி, “தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியை தேர்வுசெய்தபோது கடைசி 90 நிமடங்கள் இருக்கும்போதுதான் என்னை அழைத்தார்கள். அப்போது கடைசி நேரத்தில் என்னிடம், ‘உங்களை ஒருநாள் அணிக் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியுள்ளோம்’ எனத் தெரிவித்தனர். முன்கூட்டியே யாரும் என்னிடம் இதுகுறித்து பேசவில்லை. டி20 அணிக் கேப்டன் பதவியிலிருந்து விலகியபோது, யாரும் என்னிடம் விலக வேண்டாம் எனக் கூறவில்லை” என அதிரடியாக பேசினார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. கங்குலி, கோலி இருவரில் ஒருவர் பொய் சொல்லியிருப்பது உறுதியானது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய கங்குலி, “கோலி பேசியது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் பேச மாட்டேன். இந்த பிரச்சினையை பிசிசிஐயிடம் விட்டுவிடுங்கள்” என அதிரடியாக தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் தற்போது பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா இருவரும் இணையம் வழி ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். அப்போது விராட் கோலி மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து பேசியிருக்கிறார்கள். ஜெய் ஷா பேசும்போது, பிரச்சினையை தொடர்ந்து வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் கோலி பேசிவருவதாக தெரிகிறது. பிசிசிஐயின் விதிமுறைகளையும் அவர் மீறி வருகிறார். இதனால், விராட் கோலிக்கு இனி கேப்டன் பதவி தரக் கூடாது எனக் கூறினாராம்.