இந்திய டி20 அணியின் ‘தவிக்க முடியாத’ வீரர் சூர்யகுமார் யாதவ், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இடத்தை உறுதிசெய்ய முடியாமல் திணறி வருகிறார்.

மொத்தம் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், இதுவரை ஒரு அரை சதம் கூட எடுக்கவில்லை. நியூசிலாந்துக்கு எதிராக அடித்த 34 ரன்கள்தான் இவரது அதிகபட்ச ஸ்கோராக இருக்கிறது. இந்நிலையில், நம்பர் 4 இடத்தில் களமிறங்கி வந்த ஷ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் பங்கேற்காததால், அந்த இடம் சூர்யகுமார் யாதவுக்கு வழங்கப்பட்டது.

சொதப்பல்:
இதில் இவர் திறமையை நிரூபிக்கும் பட்சத்தில், ஷ்ரேயஸ் ஐயர் காயத்தில் இருந்து குணமடைந்து வரும்வரை, சூர்யகுமார்தான் நான்காவது இடத்தில் தொடர்ந்து களமிறங்குவார் எனக் கருதப்பட்டது. ஆனால், சூர்யகுமார் யாதவ் முதல் இரண்டு போட்டிகளிலும் மிட்செல் ஸ்டார்க் வீசிய, ஸ்டெம்ப் லைன் இன் ஸ்விஸ் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல், முதல் பந்திலேயே LBW ஆகி ஷாக் கொடுத்தார்.

மூன்றாவது போட்டியிலும்:

இதனைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் சூர்யகுமார் யாதவ், ஆஸ்டன் ஆகர் பந்துவீச்சில் முதல் பந்திலேயே போல்ட் ஆகி நடையைக் கட்டியுள்ளார். இப்படி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், மூன்று போட்டிகளிலும் கோல்டன் டக் ஆகியுள்ள முதல் வீரராக சூர்யகுமார் யாதவ் இருக்கிறார்.

சச்சின் சாதனை தகர்ப்பு:

ஒருநாள் தொடரில் தொடர்ந்து மூன்று கோல்டன் டக் ஆகியுள்ள வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் (1994), அனில் கும்ளே (1996), ஜகிர் கான் (2003), இஷாந்த் ஷர்மா (2010), ஜஸ்பரீத் பும்ரா (2017) ஆகியோர் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் 5 அல்லது 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்தான் இப்படி மோசமான சாதனையை படைத்துள்ளனர்.

முதல்முறையாக சூர்யகுமார் யாதவ் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், அனைத்து போட்டிகளிலும் கோல்டன் டக் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.